“ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதே கற்றல் நிகழும்”
“ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் போது வளர்ச்சியடையும். அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வளர்ச்சி அடைவதற்கு குழந்தை நல்ல சந்தோசமான சூழ்நிலையில் வாழவேண்டும். அவர்கள் செய்கின்ற ஒவ்வெரரு நல்ல விடயங்களையும் பெரியோராகிய நாம் தட்டிக் கொடுக்க வேண்டும் இன்று 3 ஆம் ஆண்டு பிள்ளைகளுக்குக்கூட, ரியூசனிற்கு அனுமதி கோருகின்றார்கள். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடை வேண்டும் என்ற சிறிய சந்தோசத்திற்காக பிள்ளைகளை வதைக்கின்றார்கள். அவ்வாறு இருந்தும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் எத்தனை பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்கள்? எவ்வளவு பேர் நல்ல பதவியில் உள்ளார்கள்? பல வதைப்புகளுக்கு மத்தியிலும் சித்தியடைந்தவர்களில் 6% மாணவர்கள் கூட பல்கலைக்கழகம் செல்வது இல்லை என்று தரவுகள் காட்டுகின்றன. இந்த நிலையில் மகிழ்ச்சிகரமான ஒரு சூழலில் விளையாடிக் கற்க வேண்டிய பிள்ளைகளைச் சிறைப்பிடித்து, தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் ஒரு குழந்தையின் ஆளுமை விருத்தியை மழுங்கடிக்கச் செய்வதைப் பெற்றோர் உணர்ந்து கொள்வதில்லை. இந்த நிலையை மாற்றி பிள்ளைகளை இயல்பான ஒரு சூழலில் கற்பதற்கான வாய்ப்புக்களை வளர்ந்தவர்களாகிய நாமே ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்..”
இவ்வாறு இலங்கையின் சிறுவர்கள் பூங்கா முன்பள்ளிச் சிறுவர்ளின் கால் கோள் வைபவம் கடந்த 07.12.2015 அன்று மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற பொழுது, பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆறுதல் நிறுவனத்தின், பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.சுந்தரம் டிவகலாலா அவர்கள் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் “ஆறுதல் நிறுவனம் முன்பள்ளிக் கல்வியில் மட்டுமல்லாது ஆரம்பப் பிரிவு மற்றும் இடைநிலைக் கல்வி அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தி வருகின்றது. பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் தமிழ் பேசும் மாணவர்களின் தொகையை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை ஆறுதல் நிறுவனம் முன்னெடுத்துச் செயற்படுத்தி வருகின்றது. இதற்காக ஆறுதல் நிறுவனம் கற்றல் ஊக்கிகளை வெளியிட்டு மாணவர்களின் கற்றலிலான வினைத்திறனை அதிகரித்து வருகின்றது. இக்கற்றல் ஊக்கிகளை சகல தமிழ்மொழி மூலப்பாடசாலைகளும் பெற்று தமது கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களேயானால், இன்னும் 5 வருடங்களில் வடக்கு கிழக்கு மட்டும் அல்லாது மலையகம், கொழும்பு மற்றும் தென்மாகாணத்தில் கற்கும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வார்கள். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் வடக்கு கிழக்கில் உள்ள பிள்ளைகள் அதிகமான இடங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்கில் ஆறுதல் நிறுவனம் செயற்படுகின்றது. எமது இந்தப் பயணத்தில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் பங்குதாரர்களாக வேண்டும்.”
இவ்வைபவத்தில் வலிகாமம் வலயத்தின் முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.குகநேசன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் ஆறுதல் நிறுவனம் மேற்கொண்டு வரும் செய்ற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துரை வழங்கினார்.
இவ்வைபவத்தின் சிறப்பு அதிதிகளாக முன்பள்ளி பிள்ளைப் பராய அதிகாரி செல்வி.கயல்விழி , கிராம சேவையாளர் செல்வி.கீதாஞ்சலி, NSB வங்கி அதிகாரி திரு.ராஐதுரை, திருமதி.கேமநளினி முன்பள்ளி இணைப்பாளர், திரு.அனந்தவேல் அபிவிருத்தி அலுவலர், திருமதி.அன்சுலா S.T.O அலுவலர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து முன்பள்ளிப் பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அங்கு கலந்து கொண்ட பெற்றோரின் மனநிலையிலும் அந்த நிகழ்வுகள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின.