கொரோனா தனிமைப்படுத்தல் நெருக்கடியான சூழ்நிலையில் உள ஆரோக்கியத்தைப் பேணுதல்


அவசரமாக இயங்கிக் கொண்டிருந்த உலகில், இன்று கொரோனா (Covid -19 ) தாக்கத்ததினால்; பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தற்பொழுது நாள் முழுக்க எல்லா விடயங்களிலும் கொரோனா பற்றிய பேச்சாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் நாங்கள், எங்களுடைய இந்த தனிமைப்படுத்தல் காலத்தை தற்போதும் பிற்காலத்திலும் ஆரோக்கியமானதாக ஆக்கிக்கொள்ளலாம் என்பதில் தெளிவு பெற்றிருத்தல் நன்மை பயக்கும்.

கொரோனா பரவுதலினால் அநேகமான நாடுகளில் கொரோனா தொற்றைத் தடுக்கும் முகமாக மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையானது பல்வேறு வழிகளில் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இன்னல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதாக காணப்படுகிறது. பலருக்கு இது பதட்டத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பீதியான மனநிலையையும் தோற்றுவிக்கிறது.

ஒரு மனிதனின் பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்கும் சக்தி, அவனது தாங்குதிறனிலேயே ( Resilience capacity ) தங்கியுள்ளது. தாங்குதிறன் பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றதாக இருந்தாலும் நெருக்கீடான நிலைகளிலேயே அதன் தன்மையை ஒவ்வொருத்தரும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்கள் 30 வருட யுத்தத்திற்கே தாக்குப்பிடித்தவர்கள், இந்த நிலை அவர்களுக்கு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாது எனவும் பலர் கூறுகிறார்கள். அது உண்மையும் கூட. ஆனாலும் யுத்தம் முடிவடைந்த பூமியில்தான் சமூகப் பிரச்சினைகளும் தற்கொலை முயற்சிகளும் அதிகம் காணப்படுகிறது. ஏனெனில் மக்களுடைய உளநிலை போதுமான ஆரோக்கியத்துடன் இல்லை என்றே குறிப்பிடலாம்.

தனித்து யுத்தத்தை மாத்திரம் குறிப்பிடாமல், எங்களுடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்களும் இதற்குக் காரணமாகும்.

வெளித் தொடர்புகள் இல்லாத நிலைமைக்கு அப்பால், நாளாந்தம் வானொலிச் செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவருகின்ற செய்திகள் பலரினது உள சமநிலையைக் குழப்புவதாக காணப்படுகின்றது. பலர் கூடுதலான நேரத்தினை இதற்காகவே ஒதுக்குபவர்களாகவும், கொரோனா தொடர்பான செய்திகளை வெளியிடுபவர்களாகவும் காணப்படுகின்றனர். முக்கியமாக, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவ்வாறான செய்திகளையே தேடுவது மட்டுமல்லாமல் அவற்றை தீவிர ஆர்வத்துடன் வாசிப்பவர்களாகவும் பகிர்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

காலையில் நித்திரையால் எழும்பியது தொடக்கம் இரவு நித்திரைக்குப் போகும் வரையில் கொரோனா தொடர்பான செய்திகளையே கேட்டுக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்து அவ்வாறான செய்திகளைக் கேட்டுக்கொண்டிருப்பதுவும் எங்களுடைய உளநிலையைக் குழப்புவதாகவும் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதாகவும் அமையும். ஆனாலும் மக்கள் அறிவு பூர்வமாக செய்திகளையும் அறிவுறுத்தல்களையும் விளங்கிக் கொள்ளுதல் கட்டாயமானதாகும். சிலர் முகப்புத்தகத்தில் தனித்து கொரோனா தொடர்பான பதிவுகளையே போட்டபடி இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் முகப்புத்தகச் செய்திகளை வற்ஸ்அப், வைபர் போன்ற இணைப்புகளிலும் குழுப்பகிர்தல்களும் செய்து கொண்டே இருப்பார்கள். இந்த நிலைமை தொடர்ந்தால் குறிப்பிட்ட நபர் பாதிக்கப்படுவதோடு அவரோடு சார்ந்த மற்றவர்களும் பாதிக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது.

தேவயற்ற பீதிகளைக் குறைத்து பயனுள்ள முறையில் எவ்வாறு இந்த தனிமைப்படுத்தல் காலத்தை தங்களுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக அமைக்கலாம் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

வீட்டில் வேலை இல்லாமல்தானே இருக்கிறோம் என நினைத்து எப்பொழுதும் கைத்தொலைபேசியுடனோ கணணியுடனோ இருக்கும் நேரத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். அதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அடிக்கடி இந்த செய்திகளை பார்க்காதீர்கள். வீட்டில் உள்ள எல்லோரும் பார்க்காது ஒருவர் செய்திகளை மற்றவர்களுக்கு சொல்லுதலும் நன்று. முக்கியமாக சிறுவர்களுக்கு உங்களின் பயந்த உணர்வு நிலைகளைக் காட்டாதீர்கள். இது அவர்களை மிகவும் பாதிக்கும். ஒரு செய்தியையும் உங்களின் மனதில் தோன்றும் கணிப்புகளையும் எல்லோருக்கும் முகப்புத்தகத்திலோ அல்லது வற்ஸ் அப், வைபர் மூலமோ அனைவருக்கும் பகிராதீர்கள்.

உங்களின் மனப்பாரத்தைக் குறைப்பதற்காகவெனில் குறிப்பிட்ட ஒரு சிலரிடமும் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக இரவு நித்திரைக்குப்போகும் போது இந்த செய்திகளின் நினைவுகளைத் தவிர்த்து சந்தோசமான செய்திகளை மனதில் நிறுத்தி நித்திரை கொள்ளுங்கள்.

பிரதானமாக மூன்று நிலைகளில் உள சமநிலையை பேணிக்ககொள்ள முயற்சிக்கலாம். முதலாவது எங்களுடனான ஆளுள் ( intra personal communication ) தொடர்பாடலை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். எங்களைப்பற்றி யோசிக்கலாம். முக்கியமாக எங்களுடைய உணர்வுகளை அடையாளம் கண்டு அவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலமாக தெளிவான மனநிலையை உருவாக்கலாம்.

எங்களுடைய இலக்கு, அவற்றை அடைவதற்கான வழிகள் போன்றவற்றை சரியாகத் திட்டமிடவும் அதற்கான செயற்பாடுகளைச் செய்யவும் முயற்சிக்கலாம். புதிய திறன்கள் அதாவது எங்களுக்குள்ளேயே இருக்கும் திறன்களுக்கு புத்துணர்ச்சியூட்டலாம். நேரம் இல்லாத காரணத்தாலேயே சில விடயங்களை செய்யாதிருந்திருப்போம் அவ்வாறிருந்தால் அவற்றை செய்வதற்கு முயற்சிக்கலாம். முடிந்தவரை சிறிய தியான அல்லது சுவாசப்பயிற்சிகளைச் செய்யலாம். ஓவ்வொருத்தரும் தங்களுக்கென்றே சில தளர்வு வழிமுறைகளை வைத்திருப்பார்கள் அவற்றை இந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தலாம். வாத்தியங்கள் வாசித்தல், பாடுதல், இசை கேட்டல், விளையாடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடலாம். நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடலாம். இது உறவுகளைப் பலப்படுத்தவும் புதுப்பிக்கவும் உதவும். ஆன்மீகச் செயற்பாடுகளிலும் ஈடுபடலாம்.

இயற்கையோடு நேரத்தை செலவு செய்யுங்கள் வீட்டிலுள்ள செடிகள் மரங்களோடு பேசுங்கள் அவற்றையெல்லாம் அவசர உலகில் நாங்கள் கண்டுகொள்வதே இல்லை. இது அவற்றோடு உங்கள் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம். அந்த இணைப்பு உங்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆரோக்கியமான மனநிலையை உங்களுக்கு தருவதற்கு உதவும்.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள். அலுவலகத்தில் குழுவாகப் பல வேலைகளைத் திட்டமிட்டுச் செய்வீர்கள் அல்லவா? அவ்வாறே வீட்டிலும் திட்டமிடுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள், தட்டிக்கொடுங்கள், பாராட்டுங்கள், புதிய திறன்களை ஒவ்வொருத்தரிலும் கண்டுபிடியுங்கள். புதிய முயற்சிகளை வீட்டில் உருவாக்குங்கள். வீட்டுத் தோட்டம் செய்தல், வீட்டை அலங்கரித்தல் போன்ற வேலைகளில் எல்லோரும் இணைந்து செயற்படலாம். வீட்டிலுள்ளவர்களோடு பகிர மறந்துபோன விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் வயதானவர்கள் இருந்தால் பல அனுபவங்களை உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுவார்கள். இது அவர்களுக்கு பகிர்தலுக்கான சந்தர்ப்பத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாது அவர்களுடனான உறவையும் பலப்படுத்தும்.

சமுதாயத்தை பற்றி யோசிக்கலாம். இந்த சூழ்நிலையில் ஏதாவது ஆரோக்கியமான பகிர்தல்களைச் செய்யலாம். செய்பவர்களை பாராட்டவாவது செய்யலாம். உங்களிடம் இருக்கும் அறிவு, நுட்பம் திறன்களை ஏதோவொரு வகையில் சமூகத்திற்கு கொடுங்கள். ஆறுதல்படுத்த வேண்டிய பலர் இருப்பார்கள், வயோதிபர்கள், தனிமையாக வாழுபவர்கள் ஆறுதல் மொழி தேவைப்படுவோர் இருக்கலாம். அவர்களுடன் முடிந்தால் தொலைபேசியிலாவது உரையாடல்களைச் செய்யுங்கள்.

மனம் இறுக்கமாகவோ அல்லது நித்திரைக் குழப்பம், பயங்கரக் கனவுகள், பசியின்மை அல்லது அதிகமான பசி, உடல் வியர்த்தல் நெஞ்சுப்படபடப்பு, எப்போதுமே சந்தோசமின்மை, போன்ற குணங்குறிகள் இருப்பின் உளவளத்துணையாளரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் நன்று.
இந்தத் தனிமைப்படுத்தலானது உறவுச் சிக்கல்கள், குழப்பங்கள் உள்ள குடும்பங்களில் மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அவ்வாறான நிலைமையில் பிள்ளைகளும்கூட பாதிப்புக்களையும் பாதுகாப்புப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளலாம். அவ்வாறான குழப்ப நிலைகளுக்கு முகம் கொடுப்பவர்கள் உரியவர்களிடம் (நம்பிக்கையான நண்பர்கள், உறவினர், உளவளத்துணையாளர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸ்) ஆலோசனைகளையும் உதவியினையும் பெற்றுக்கொள்வதுடன் தங்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.

தொடர்ந்து ஒரே விடயத்தில் முழு நாளையும் செலவு செய்யாமல் உற்சாகமான ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு நாங்களும் எங்களைச் சார்ந்தவர்களையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள இந்த தனிமைப்படுத்தல் காலத்தை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவோம்.

ந.றஞ்சுதமலர்
உளவளத்துணையாளர்

(வீரகேசரியில் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி பிரசுரமான கட்டுரை)