முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி ஆறுதல் நிறுவனத்தினால் இரண்டாம் தொகுதியினருக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாக தனது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான டிப்ளோமா பயிற்சி மற்றும் மாதிரி முன்பள்ளிகளை நடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகின்றது.
கொவிட்-19 சர்வதேச பரவல் காரணமாக இலங்கையிலுள்ள முன்பள்ளிகளிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. முக்கியமாக முன்பள்ளி பிள்ளைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் இதன் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள்.
பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிப்பதைத் தொடர்ந்து முன்பள்ளிகளும் ஆரம்பிக்கப்படல் வேண்டும். இருப்பினும் முன்பள்ளி ஆசிரியர்கள் முன்பள்ளிப் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளார்கள். இக்கட்டான நிலைமைகளில் மாத்திரம் அல்லாமல் தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி பிள்ளைகளின் விருத்தி நிலைக்கு உதவ வேண்டிய கட்டாயமும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆறுதல் நிறுவனமானது இவ்வாறான நிலைகளைக் கருத்தில் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களை வலுப்படுத்தவும் அவர்களை இச்சூழ்நிலைக்கு தயார்படுத்தவும் நட்புதவியாளர் திறன் பயிற்சியை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக யாழ்ப்பாண கல்வி வலயத்தைச் சேர்ந்த 25 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் வகுப்பறை பயிற்சியும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான கள விஜயமும் தொடர்ந்து 2 நாட்கள் அனுபவப் பகிர்வும் வழங்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாம் தொகுதியினராக வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த 27 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நட்புதவியாளர் பயிற்சியினை நடாத்திக் கொண்டிருக்கிறது.